தமிழகம்

கட்டுமான தொழில் மீண்டும் முடங்கும் அபாயம்: மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பொருட்களை எடுத்துச்செல்வதை தடுக்கும் போலீஸார்

கி.மகாராஜன்

ஊரடங்கால் ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமான தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது. இருப்பினும் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல போலீஸார் அனுமதி மறுப்பதால் கட்டுமான தொழில் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கட்டுமான தொழில் உட்பட அனைத்து தொழில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் வருவாய் இழந்து குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3-ல் முடிவடைந்ததையடுத்து கட்டுமான தொழிலை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டுமானத் தொழிலுக்கு தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஒரு மாதமாக முடக்கம் அடைந்திருந்த கட்டுமான தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது. பாதியில் விடப்பட்ட கட்டிடங்களில் மீண்டும் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே மாவட்ட எல்லைப் பகுதியிலிருந்து பக்கத்து மாவட்டத்துக்கு கட்டுமானப் பொருட்களை கொண்டுச் செல்வதை போலீஸார் தடுப்பதாக கட்டுமான தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலூர், அழகர்கோவில் பகுதிகளில் இருந்து அருகாமை மாவட்டமான திண்டுக்கல் நத்தம் பகுதிக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டுச் செல்வதை போலீஸார் தடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே கட்டுமானப் பொருட்களை அனுமதிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானப் பொருட்களை கொண்டுச் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தொழிலாளர்கள் எடுத்துக்கூடியும் போலீஸார் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இந்த தடையால் கட்டுமான தொழில் மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்படும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT