தலித் எழில்மலை 
தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை காலமானார்- முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய இணை அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இரும்பேடு கிராமத்தில் பிறந்த தலித்எழில்மலை, இந்திய ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவருக்கு முனிரத்தினம் என்ற மனைவியும், 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 1989-ல் பாமக தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தார்.பாமகவின் முதல் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998-ல் அதிமுக - பாஜக கூட்டணியில் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலித் எழில்மலை, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

1999-ல் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2001-ல் திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 2004-க்குப் பிறகுஅரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். தலித் எழில்மலையின் உடல் அவரது சொந்த ஊரான இரும்பேடு கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘அதிமுக முன்னாள் அமைப்புச் செயலாளர் தலித் எழில்மலை மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் தலித் எழில்மலையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT