முதல்வர் பழனிசாமியின் உத்தர வின்படி சென்னையில் தினசரி 50 மில்லியன் லிட்டர் குடிநீர் அதிகரிக்கப்பட்டு, லாரிகள் மூலம்குடிநீர் விநியோகிக்கப்பட்ட 1,000 தெருக்களில் குழாய் மூலம் குடிநீர்வழங்கப்படும் என்று அமைச்சர்எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னையில் மேற்கொள்ளப் படும் கரோனா தடுப்பு நடவடிக்கை கள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில், சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் மற்றும் 12,575 ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஒட்டுமொத்த கரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந் தார்.
மேலும் அமைச்சர் வேலுமணி பேசும்போது, ‘‘கரோனா வைரஸ்பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக, சென்னையில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும்போது அதிக மக்கள் கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில், ஏற்கெனவே லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்ட 1,000 தெருக்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்க, 50 எம்எல்டி (மில்லியன் லிட்டர்) அதிகரித்து நாள்தோறும் 700 எம்எல்டி குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகரில் மே 7 முதல் நாள்தோறும் 700 எம்எல்டி குடிநீர் வழங்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.