தமிழகம்

பச்சை மண்டலமாக மாறுவதற்கு 2 நாட்களே இருந்த நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் கரோனா தொற்று: 19 நாட்களுக்கு பிறகு 2 பேருக்கு உறுதியானது

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் 19 நாட்களுக்கு பிறகு பெண் உள்ளிட்ட 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டம் பச்சை மண்டலமாக மாறுவதற்கு 2 நாட்களே இருந்த நிலையில் மீண்டும் தொற்று ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்துவிட்டார். மற்ற 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதனால் இம்மாதம் 1-ம் தேதியே தூத்துக்குடி மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது. மேலும், சிவப்பு மண்டலத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியது.

கடைசியாக தொற்று ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு புதிய தொற்று ஏற்படவில்லை எனில், அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் 19 நாட்களாக புதிய தொற்று இல்லாமல் கடந்து வந்த நிலையில், பச்சை மண்டலமாகமாறுவதற்கு 2 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

நாசரேத் அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தை சேர்ந்த 36 வயது லாரி டிரைவர், எப்போதும்வென்றான் அருகேயுள்ள ஆதனூரை சேர்ந்த 22 வயது பெண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் லாரி டிரைவர் கொல்கத்தா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சென்று வந்துள்ளார். அதுபோல அந்த பெண் சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து மளவராயநத்தம், ஆதனுர் கிராமங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு, முடக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

19 நாட்களுக்கு பிறகு 2 பேருக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT