மதுக்கடைகளை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் இல்லம் நோக்கி சாலை மார்கமாக நடந்துச் சென்ற 5 சிறுவர்களை போலீஸார் மீட்டு அவர்கள் இல்லங்களில் ஒப்படைத்தனர்.
கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 24 முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு அகடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முக்கிய நிகழ்வாக டாஸ்மாக் மதுபானம் கடைகள் 40 நாட்களாக மூடப்பட்டு கிடக்கிறது. மெகா குடிகாரர்கள்கூட குடிக்காமல் 40 நாட்கள் மது இன்றி வாழ்ந்து வருகின்றனர். முடியாதவர்கள் அதிக விலை கொடுத்து பிளாக்கிலும், கள்ளச்சாரயம், கிடைத்ததை குடிப்பது, வீட்டிலியே சாராயம் காய்ச்சுவது என போலீஸிலும் சிக்கினர்.
40 நாட்கள் ஊரடங்கில் வருமானமின்றி பொதுமக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தமிழகத்தில் கரோனாவின் பாதிப்பு குறையவில்லை. இந்தியாவில் மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லிக்கு அடுத்து 4-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. சென்னை தமிழகத்தில் பாதி என்கிற அளவில் 2000 பேரை கடந்து கரோனா தொற்று உள்ளது.
இந்நிலையில் திடீரென மதுக்கடைகளை சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை பெண்கள், அனைத்து எதிர்க்கட்சித்தலைவர்கள், அதிமுகவின் கூட்டணிக்கட்சித்தலைவர்கள் ராமதாஸ் உள்ளிட்டோரும் எதிர்க்கின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் படூரில் வசிக்கும் 5 சிறுவர் சிறுமியர் தங்கள் எதிர்ப்பை முதல்வருக்கு தெரிவிக்க கடிதம், கோரிக்கை அட்டைகளுடன் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக நடந்தே சென்றனர். அவர்களை சாலையில் செல்வோர் நின்று கவனித்து வாழ்த்திவிட்டுச் சென்றனர். இந்த தகவல் போலீஸாருக்கும் சென்றது.
சாலையில் நடந்துச் சென்ற சிறுவர்களை ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே போலீஸார் மடக்கினர். பின்னர் அவர்களை இதுபோன்று நெடுஞ்சாலைகளில் நடப்பது பாதுகாப்பற்றது எனத்தெரிவித்து பாதுகாப்பாக அவர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.