'காவிரி மேலாண்மை ஆணையம் இனி மத்திய அரசின் ஜல் சக்தித் துறையின் கீழ் இயங்கும்' என்ற அரசாணையின் மூலம், தமிழக மக்களின் பல்லாண்டு காலக் கடும் போராட்டத்துக்கு பிறகு அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அதிகாரமற்ற அமைப்பாக மாற்றும் வேலையை மத்திய அரசு சத்தமில்லாமல் செய்து முடித்துள்ளது.
இதற்குத் தமிழக மக்களின் சார்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. தமிழக அரசியல் கட்த்சி தலைவர்கள் பலரும் இதற்குத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் மத்திய அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் நாளை மாலை அனைவரும் கருப்புக்கொடி ஏந்திப் போராடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா பொது முடக்கத்தால் நாம் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இச்சூழலில், போராடிப் பெற்ற காவிரி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராகத் தமிழர்களாகிய நாம், நமது கண்டனத்தை நமது இல்லத்திலிருந்தே பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி, நாளை மாலை 5 மணியிலிருந்து 5.30 மணிக்குள், நம் இல்லங்களின் வாயிலில் தனி மனித இடைவெளியுடன் கருப்புக் கொடி மற்றும் கண்டனப் பதாகை ஏந்தி நிற்போம். அதை கைப்பேசியில் படமெடுத்து, மாலை 5 மணி முதல் #SaveCauveryAuthority என்ற குறிச்சொல்லோடு (Hashtag) ட்விட்டர், முகநூல் வலைதளங்களில் பகிர்வோம். அதன் மூலம் இந்திய அரசுக்கு நம் கண்டனத்தைப் பதிவு செய்வோம்.
வீடுகளில் முடங்கிக் கிடக்காமல், இப்போதே இந்தத் தகவலை உங்களது நண்பர்களுக்கு அனுப்பி, வெள்ளைத் தாளில் கண்டனச் செய்தியை எழுதிப் படமெடுத்து வைத்துக் கொண்டு, அதை நாளை மாலை 5 மணியிலிருந்து பகிருமாறு அவர்களிடம் கோருங்கள். நாம் ஒவ்வொருவரும் பத்து பேரை இவ்வாறு படமெடுத்துப் பகிரச் செய்தால், பல லட்சக்கணக்கான தமிழர்களை அவரவர் இல்லங்களிலிருந்து கொண்டே இந்திய அரசை நோக்கிக் கேள்வி கேட்க வைக்க முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.