தமிழகம்

ஜிப்மரில் வரும் 8ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவை துவக்கம்: முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி

செ.ஞானபிரகாஷ்

ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 8-ம் தேதி முதல் குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை துவக்குகிறது. முன்பதிவு செய்தோருக்கு குறுந்தகவல் மூலம் தகவல் தரப்படும். அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் கூறியதாவது:

”ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலூரை சேர்ந்த மூவருடன் தொடர்பில் இருந்த 46 பேர்களில் 44 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடந்தது. இதுவரை வைரஸ் தொற்று இல்லை. மீண்டும் மறு பரிசோதனை செய்யப்படும். இந்நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாத 61 பேரை கண்டறிந்து சுய கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லை

ஜிப்மர் மருத்துவமனை வரும் மே 8ம் தேதி முதல் குறிப்பிட்ட வெளிப்புற நோயாளிகள் பிரிவு சேவைகளை தொடங்குகிறது. இச்சேவைகள் தொலைபேசி மற்றும் காணொலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் தரப்படும். சேவை வேண்டுவோர் ஜிப்மரின் 0413 2298200என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மருத்துவர் உங்களுக்கு தொலைபேசி, காணொலி மூலம் சிகிச்சை தரும் தேதி பதிவு செய்துள்ள தொலைபேசியில் குறுந்தகவலாக தரப்படும். நேரில் வரவேண்டிய நோயாளிகளுக்கான நாள், நேரம் விவரமும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்ந நாளில் நோயாளியும், அவருடன் ஒருவர் மட்டும் ஜிப்மருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்தோருக்கு முன்னதாக நோய் தொற்று உள்ளதா என பரிசோதித்த பிறகே குறிப்பிட்ட சிகிச்சை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் நோயாளிகள் மருத்துவமனைக்குவரும் போக்குவரத்துக்கு எவ்வித பொறுப்பும் ஏற்க இயலாத நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT