தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இதற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த பொனிபாஸ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மே 3-க்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கோயம்பேடு சந்தையின் பணியாற்றிய பலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கரோனா பரவல் நிலை சமூகபரவல் நிலையை அடைந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது சரியல்ல. டாஸ்மாக் கடைகளை திறந்தால் நோய்த்தொற்று பரவல் சமூக பரவலை தொடும். இதனால் இவ்வளவு நாளாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு பயனற்றாகிவிடும்.
மது அருந்துதல், புகைபிடித்தல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து மது அருந்துவோரை எளிதில் கரோனா தொற்றுக்கு ஆளாக செய்யும். எனவே டாஸ்மாக் கடை திறப்பு தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.