டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் வீட்டின் முன்பு நின்றபடியே போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அக்கட்சியினர் வீட்டு வாசலில் நின்றபடி மதுக்கடைகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதில் அவர்களது குடும்பத்தினர், குழந்தைகளும் பங்கேற்றார்கள். கையில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் பதாதைகளும் ஏந்தியிருந்தனர். அதேபோல முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவர்கள் போராட்ட வீடியோ, புகைப்படங்களைப் பகிர்ந்தனர்.
இதேபோல தமிழ்ப்புலிகள் அமைப்பு சார்பில் அக்கட்சியினர் முகநூல் வாயிலாக கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். மதுக்கடை திறப்புக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கைவிட வலியுறுத்தியும் மதுரையில் நடந்த பேராட்டத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் சி.பேரறிவாளன், நிதிச் செயலாளர் கரு.சித்தார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது. கரோனா வைரஸ் போல வேடமணிந்து, கையில் குடை பிடித்து தனிமனித இடைவெளியுடன் நடந்த இந்தப் போராட்டத்துக்கு மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், மாவட்ட செயலாளர் த.செல்வராஜ், நிர்வாகிகள் சாரதி, பாவெல், சரண் உள்பட பலர் பங்கேற்றனர். போராட்ட முடிவில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.