கரோனா பேரிடர்க் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரியை ஓர் ஆண்டுக்கும், தண்ணீர் வரியை ஆறு மாதங்களுக்கும் தள்ளுபடி செய்யவேண்டும் என பரங்கிப்பேட்டை பொதுமக்கள் சார்பில் முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை பொதுமக்கள் சார்பில் இந்த மனுவை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ அனுப்பி உள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
''உள்ளாட்சி அமைப்புகளுக்கு மார்ச் 31-க்குள் மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கரோனா முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இதுவும்கூட பெரும் சுமைதான். கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளார்கள் உள்ளிட்ட பலர் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பல வகையிலும் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
வேலைக்குப் போகும் வாய்ப்பு இல்லா நிலையில், வயிற்றுப் பாட்டுக்கே அல்லல்படும் போது அவர்களால் சொத்துவரியை எப்படிக் கட்ட முடியும்? எனவே, 2019- 20 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியையும், ஆறு மாதங்களுக்கான குடிநீர் வரியையும் தமிழக அரசு தள்ளுபடி செய்யவேண்டும்.
மேலும், தற்போது பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் மின் ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து மின் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, கடந்த மாதங்களில் செலுத்திய மின்சாரக் கட்டணத்தையே செலுத்துமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால், மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கையால 80 சதவீத மக்கள், இனி அடுத்து எடுக்க உள்ள அளவீட்டிற்கு பிறகு கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.
வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இது பெரும் சுமையாகும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங் களுக்கான மின் அளவீட்டை அவர்களே எடுத்து, மின்சார வாரியத்திற்கு அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது. இதுபோன்ற நடைமுறையை வீடுகளுக்கும் அமல்படுத்த வேண்டும். அல்லது இரண்டு மாதங்களுக்கு அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பிழைப்புக்கு வழி தெரியாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு இலவச மின்சாரம் என்பது அரசின் கரோனா காலத்து இன்னொரு நிவாரணம் போல் உண்மையான பலனைத் தரும்''.
இவ்வாறு கலீல் பாகவீ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.