தமிழகம்

கோயம்பேடு சந்தை மூடல்; திருமழிசையில் சந்தை தயாராவதில் தாமதம்: காய்கறி விலை கிடு கிடு உயர்வு

செய்திப்பிரிவு

திருமழிசையில் காய்கறி கடையை திறக்க கோயம்பேடு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டும் 5 நாட்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது திருமழிசை மார்க்கெட் திறப்பது தாமதமாகும் என்கிற நிலை காய்கறிவிலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பை அடுத்து அத்தியாவ்சிய தேவைகள் தவிர அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டன. சென்னையில் காய்கறி வரத்துக்கு முக்கிய கேந்திரமாக இருப்பது கோயம்பேடு மார்க்கெட். இங்கு தினந்தோறும் கர்நாடகா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து 6000 டன் காய்கறிகள் வருகின்றன.

10 ஆயிரம் பேர் வியாபாரிகள், தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர், 6000 வாகனங்கள் வந்துச்செல்லும். இங்கிருந்து சென்னை மக்களின் தேவை தவிர சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் காய்கறிகள் செல்கிறது.

இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே பலரும் எச்சரித்து வந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் குவியும் நிலை உருவாக்கப்பட்டதன் விளைவு கரோனா தொற்றின் மையமாக கோயம்பேடு மார்க்கெட் மாறிப்போனது.
தமிழகத்தில் மீண்டும் கரோனா நோயாளிகள் அதிகரிக்கும் நிலைக்கு கோயம்பேடு தொற்று காரணமாக அமைந்தது.

இதனால் கோயம்பேடு கனிகள் அங்காடி, பூ மார்க்கெட் ஏற்கெனவே மூடப்பட்ட நிலையில் காய்கறிச் சந்தையை திருமழிசைக்கு மாற்ற சிஎம்டிஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வசதியும், இடமும் அங்கு இருக்காது என எதிர்ப்புத்தெரிவித்து, 5 நாட்கள் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்றைய இருப்புடன் காய்கறிகள் இருப்பு தீர்ந்து விட்டது. இதனால் சென்னையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாளை வரத்து இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டால் மேலும் காய்கறி விலை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT