டாஸ்மாக் கடை திறப்பில் தமிழக அரசு மும்மூரம் காட்டி வருகிறது, இதனால் தமிழகத்தில் சமூக பரவல் அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. ஊரடங்கின் மூலமாக கரோனா நோயை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முழு தோல்வி அடைந்துவிட்டது.
கோயம்பேடு காய்கறி சந்தை கரோனா நோயின் பிறப்பிடமாக மாறியதற்கு யார் காரணம்? அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியதற்கு யார் பொறுப்பு? அங்கே நடைபெறுகிற காய்கறி விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் உரிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையமும் உரிய நடைமுறையை பபின்பற்றாததான் விளைவாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு கூடிவிட்டது.
இந்நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை மே 7 ஆம் தேதி முதல் திறப்பதென தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சமூக பரவலை சீர்குலைத்து கரோனா நோயை பரப்புகின்ற முயற்சி வேறெதுவும் இருக்க முடியாது. அதே நேரத்தில் கரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதியை வழங்க மறுத்து வருகிறது.
இந்த பின்னணியில் மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்பு சின்னம் அணிந்து அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5 பேருக்கு அதிகமாகாமல் 15 நிமிடங்கள் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கரோனா நோய் ஒழிப்பில் தோல்வியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து முழக்கமிட்டு கலைவதென்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் எடுத்த முடிவினை தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கிறது.
இந்த கண்டனப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.