தமிழகம்

அவரவர்  தகுதிக்கேற்ப நிவாரணப் பொருட்கள்: கோவையில் கலக்கும் ஆளுங்கட்சியினர்

கா.சு.வேலாயுதன்

கரோனா பொது முடக்கத்தின் காரணமாகப் பல்வேறு வகைகளில் அவதிப்படும் மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. அதிமுகவினர் தங்கள் சொந்த செலவிலும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். இதில் அவர்களுக்கு இடையில் நடக்கும் போட்டிதான் இன்றைக்கு கோவையில் ஹாட் டாபிக்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை என மொத்தம் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு முறையே ஓ.கே. சின்னராஜூ, வி.பி.கந்தசாமி, வி.சி.ஆறுக்குட்டி, அருண்குமார், அம்மன் அர்ஜூனன், எஸ்.பி.வேலுமணி, கார்த்தி, எட்டிமடை சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எம்எல்ஏ-க்கள். இதில், சிங்காநல்லூர் கார்த்தி மட்டுமே திமுக எம்எல்ஏ. மற்ற அனைவரும் அதிமுக எம்எல்ஏ-க்கள். இவர்களில், தொண்டாமுத்தூர் எம்எல்ஏவான எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக சட்டப்பேரவைத் துணை சபாநாயகராகவும் இருக்கின்றனர்.

இத்தனை பேர் இருந்தாலும் இங்கு அமைச்சர் வேலுமணியின் கையே எல்லா வகையிலும் ஓங்கியிருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசின் சார்பில், 1,000 ரூபாயும் விலையில்லா ரேஷன் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கியதில் முழுமைபெற்ற தொகுதியாக அமைச்சரின் தொண்டாமுத்தூர் தொகுதியே விளங்குகிறது. அந்த அளவுக்குக் கட்சிக்காரர்களையும், தன்னார்வலர்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு தெருவாகக் கணக்கெடுத்து பயனாளிகளுக்குத் திட்டம் சென்று சேருமாறு செய்துள்ளார் அமைச்சர்.

அதுமட்டுமல்ல. தனது ஆட்கள் மூலம் எல்லா வீடுகளிலும் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். அந்தக் குடும்பங்களுக்கு எல்லாம் டோக்கன் வழங்கி, அவர்கள் அனைவருக்கும் வீடு, வீடாகத் தேடி வந்து 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் என 21 நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை வழங்கியுள்ளனர் கட்சிக்காரர்கள். இதை தனது தொகுதியில் மட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள மற்ற 9 தொகுதிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் வேலுமணி. அமைச்சர் தொகுதிக்கும், மற்ற தொகுதிகளுக்கும் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் சில வித்தியாசங்களும் இருந்திருக்கின்றன.

அமைச்சர் தொகுதியில் வழங்கப்பட்டவை 22 பொருட்கள். அவை முழுமையாக அட்டைப் பெட்டியில் இறுக்கமாக பேக்கிங் செய்யப்பட்டு பத்திரமாக வழங்கப்பட்டன. மற்ற தொகுதிகளில் வழங்கிய பார்சல்கள் அட்டைப் பெட்டியில் அல்லாமல், பைகளில் போட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம் பைகளில் அமைச்சர் படத்திற்கு பதில் அந்தந்தத் தொகுதி எம்எல்ஏ-க்களின் படங்கள் இருந்தன. கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக வசம் என்பதால் இங்கு கோவை மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவராக இருந்த ஜெயராமனை முன்னிலைப்படுத்தி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பார்சல்களில் அமைச்சர் படத்துடன் ஜெயராமனின் படமும் இருந்தது.

இது குறித்து மூத்த அதிமுக பிரமுகர் ஒருவருடன் பேசிய போது, ‘‘ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் பேருக்கு இது போன்ற நிவாரணப் பொருட்கள் கொண்ட பார்சலை வழங்க வேண்டும் என்பது தலைமையிலிருந்தே வந்த உத்தரவு. அதை ஒவ்வொரு எம்எல்ஏ-வும் செய்ய வேண்டும். அவர்களுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்களே வழிகாட்டியாக இருப்பதோடு, உதவியும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல். இப்படி 50 ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதன் மூலம் இதன் பலன் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்குச் சென்றடையும் என்பது எங்கள் கணக்கு.

ஒரு பார்சலுக்கு குறைந்தபட்சம் 500 முதல் 700 ரூபாய் வரை செலவாகும். இதற்காகும் செலவுக்கு அமைச்சர் பங்களிப்பாக 50 லட்ச ரூபாய் தரப்படும். எஞ்சிய தொகையை தொகுதி எம்எல்ஏ-க்கள் வழங்க வேண்டும் அல்லது ஸ்பான்சர் வாங்கிச் செய்ய வேண்டும். இதனால்தான் அவரவர் சக்திக்கேற்றபடி எம்எல்ஏ-க்கள் செய்கிறார்கள். பொருட்களின் எண்ணிக்கையும், அளவும் மாறுபடுகிறது. சிங்காநல்லூர் தொகுதியைப் பொறுத்தவரை, வரும் தேர்தலில் அதிமுக வேட்பாளராக வரக்கூடியவராக ஜெயராமன் அடையாளப்படுத்தப்பட உள்ளார் போலும். எனவேதான் அவர் மட்டும் சிங்காநல்லூர் தொகுதியில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார். அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் அத்தனையும் தங்கு தடையின்றி மக்களுக்குப் போய்ச் சேருவதில் மட்டுமல்ல, இப்படி தனிப்பட்ட முறையில் வழங்கும் இந்த நிவாரணப் பொருட்களும் மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதிலும் அமைச்சர் முனைப்புடன் இருக்கிறார்” என்றார்.

அதிமுகவினரால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் கட்சிபேதமின்றி அனைவருக்குமே வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். சில இடங்களில் ஸ்டாலின் படமும் திமுக கொடியும் பதித்திருந்த வண்டிகளில் இந்த நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றவர்களை படம் பிடித்து ‘திமுகவிற்கும் கரோனா நிவாரணம் வழங்கும் அதிமுக’ என சமூகவலைதளங்களில் பதிவிடும் வேடிக்கையும் நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளில் யாராவது வயதானவர்கள் இருந்தால் அவர்கள் வீட்டிற்கே நேரடியாகச் சென்று பொருட்களை வழங்குகிறார் அமைச்சர் வேலுமணி.

அதில் கடந்த வியாழன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாளின் இல்லம் தேடிச் சென்று திண்ணையில் அமர்ந்து நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர், ‘‘பாட்டி இதுல 22 பொருட்கள் இருக்கு. இது எல்லாம் நானும் என் மனைவியும் பார்த்துப் பார்த்து பொட்டலம் பண்ணி போட்டு இந்த பெட்டிக்குள்ளே உனக்காக அடைச்சு வச்சிருக்கோம். இதுல 10 முகக்கவசம் வைச்சிருக்கோம். அதை எடுத்து உன் முகத்துல கட்டிக்க, கரோனா வராமப் பாதுகாத்துக்க” என சொன்ன வீடியோ இணையதளங்களில் வைரலும் ஆனது.

SCROLL FOR NEXT