தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கரோனா என்னை கவலையடைய வைக்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விழிப்புணர்வு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தவர் தமிழிசை சௌந்தரராஜன். அடிப்படையில் இவரும், இவரது கணவரும் மருத்துவர்கள். தமிழிசை குமரி ஆனந்தனின் மகள் என்பதால் அனைத்து தலைவர்களுக்கும் அவர் பழக்கம்.
தமிழகத்தில் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்திலிருந்து பாஜக பக்கம் தாவியவர் தமிழிசை.
‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற இவரது கோஷம் பிரதானமானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் பாஜக ஆட்சி மீண்டும் வந்ததும் தெலங்கானா ஆளுநராக்கப்பட்டார்.
இதனால் சென்னையிலிருந்து குடிபெயர்ந்து தெலங்கானாவில் வசித்து வருகிறார். ஆளுநராக இருந்தாலும் தாம் அரசியலில் வளர்ந்த சென்னையை அவர் மறக்கவில்லை. ஒரு மருத்துவராக கரோனா பாதிப்பு குறித்தும் சென்னையின் நிலை குறித்தும் தமிழிசை தனது கவலையை கவிதை வடிவில் வெளியிட்டுள்ளார்.
அவரது விழிப்புணர்வு கவிதை:
“தூரத்தில் நானிருந்தாலும்
சென்னையை துரத்தும் கரோனா
என்னைக் கவலையடையச் செய்கிறது...
கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால்
கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்...
அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால்
அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்...
கடைபிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால்
கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்...
ஊரடங்கைக் கடைபிடியுங்கள் என்றால்
ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்...
முகக்கவசம் அணியுங்கள் என்றால்
மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்...
சமூக இடைவெளி வேண்டும் என்றால்
சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்...
கை கழுவுங்கள் அடிக்கடி என்றால்
கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?
கரோனா கேட்கிறது...
அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு
அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?
எனவே...
அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு...
அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என
முடிவெடுங்கள் ...முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை”.
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.