அறிகுறிகள் இல்லாமலும், லேசான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும் 25 சதவீத படுக்கைகள் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னையில் அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அனைத்து நிரம்பிவிட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், சித்தா கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, லயோலா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் மட்டும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்த மையம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. 550 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து 85 நோயாளிகள், வர்த்தக மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் கரோனாவைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகள், திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா வைரஸால் நோயாளிகளுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், “அறிகுறிகள் இல்லாமலும், லேசான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். இதற்கு, வீடு நல்ல காற்றோட்ட வசதியுடன், நோயாளிக்கென தனி கழிப்பறைஇருக்க வேண்டும். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒருவர் இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்படி அந்த நபர் கண்டிப்பாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக் கொள்ள வேண்டும். நோயாளி மற்றும் கவனித்துக் கொள்பவருக்கு 10 நாட்களுக்கு ஜிங் மாத்திரை, வைட்டமின் சிமற்றும் அனைத்து வைட்டமின்கள் உள்ளடக்கிய மாத்திரை, நிலவேம்பு குடிநீர் பவுடன், கபசுரக் குடிநீர் பவுடர் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறிகுறிகள் இல்லாமலும், லேசான காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சிலர் வீட்டுச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வசந்தாமணியிடம் கேட்ட போது, “தமிழக அரசின் உத்தரவின்படி பாதிப்பு இல்லாத கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். நோயாளிக்கும், அவரை கவனித்துக் கொள்பவருக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நோயாளி வீட்டு சிகிச்சையில் இருந்தாலும், அவர் மருத்துவரின் தொடர்பில் இருப்பார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை தரப்படும்” என்றார்.
தெரு, அப்பார்ட்மெண்டுகளில் பிரச்சினை
கரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர் வசிக்கும் தெரு முடக்கப்படுகிறது. தெருவின் அனைத்து நுழைவுவாயில்களும் கட்டைகள் கொண்டு தடுப்புஅமைத்துவிடுகின்றனர். போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், தெருவில் வசிக்கும் யாரும் அவசர தேவைக்குக்கூட வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல்,அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்குவைரஸ் தொற்று ஏற்பட்டால், ஒட்டுமொத்தமாக அனைத்து குடியிருப்புகளுக்கும் சீல் வைத்துவிடுகின்றனர். இதனால், தெருக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மற்றவர்கள் தகராறு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடம் கேட்டபோது, “கரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரது குடும்பத்தை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். அதைசெய்யாமல் ஒட்டுமொத்தமாக தெருக்களையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு சொல்வதைப்போல் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை. கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்கின்றனர். ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், அருகில் வசிப்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும்" என்றனர்.