தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுவிலக்கு வேண்டி மனித சங்கிலி அமைத்து நிற்க முயன்றபோது, காவல்துறை அவரைக் கைது செய்தது அராஜக நடவடிக்கை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டை நாசமாக்கி வருகின்ற மது போதையின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க சசிபெருமாள் அறப்போர் நடத்தியபோது உயிரிழந்தார். அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
மதுவை எதிர்த்து மக்கள் சக்தியை அறவழியில் திரட்ட, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆயிரக்கணக்கான தோழர்களுடன் மனித சங்கிலி அமைத்து நிற்க முயன்றபோது, அதனைத் தடுத்து ஜெயலலிதா அரசின் காவல்துறை அவரைக் கைது செய்தது அராஜக நடவடிக்கை ஆகும்.
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையின் குறுக்கே நிற்காமல், சாலை ஓரத்தில் வரிசையாக நிற்பது ஜனநாயகத்தில் அடிப்படை உரிமை ஆகும். அதிமுக அரசு ஜனநாயக உரிமைகளைக் காலில்போட்டு மிதிக்கிறது என்பதற்கு சாட்சியம்தான் இந்தக் கைது நடவடிக்கை.
மதுவை எதிர்த்துப் போராடுகிறவர்களை அடக்குமுறையின் மூலம் அச்சுறுத்தலாம், மிரட்டலாம் என்று ஜெயலலிதா அரசு தப்புக் கணக்குப் போடுகிறது.
மிகப்பெரிய சர்வாதிகாரிகளின் கொட்டம் எல்லாம் மூண்டு எழும் மக்கள் சக்தியால் தகர்ந்து தரைமட்டாகி உள்ளது என்பதைச் சரித்திரம் நிரூபித்துள்ளது.
ஜெயலலிதா அரசின் காவல்துறை அடக்குமுறையைத் துச்சமாகக் கருதி தாய்மார்களும், இளைஞர்களும், மாணவச் செல்வங்களும் ஆவேசத்துடன் கிளர்ந்து எழுந்து தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க அறவழியில் போராட வேண்டுகிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.