பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

திட்டக்குடியில் கிராம நிர்வாக அலுவலரைக் கத்தியால் வெட்ட முயன்ற நபர் கைது

ந.முருகவேல்

திட்டக்குடியில் நோய் தொற்று குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலரைக் கத்தியால் வெட்ட முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோயம்பேடு காய்கறிச் சந்தையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனையில் மாவட்ட சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர் பயண விவரம் குறித்து அறியும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று (மே 5) அவரது வீட்டுக்குச் சென்ற சிறுமுளை கிராம நிர்வாக அலுவலரான சிவக்குமார், கரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி மற்றும் மகனிடம் விவரம் கேட்டு குறிப்பெழுதிக் கொண்டிருந்தார். அப்போது தொற்றுக்குள்ளானவரின் மகன் முருகன் (22) என்பவர், திடீரென கரும்பு வெட்டும் அரிவாளை துண்டுக்குள் மறைத்து எடுத்து வந்து, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரை நோக்கி வீசியுள்ளார்.

ஆனால், வீச்சிலிருந்து தப்பிய சிவக்குமார், அங்கிருந்து ஓட்டம்பிடித்து சுவரேறி தப்பித்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சிவக்குமாரை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மக்கள் கூடுவதை அறிந்த முருகன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், திட்டக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முருகனைக் கைது செய்தனர்.இருப்பினும் முருகன் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், அவர் தற்போது போலீஸ் காவலில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேலிடம் கேட்டபோது, "முருகனின் தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டதையறிந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், அக்குடும்பத்தினருக்கு அரசின் அறிவுரைகளை எடுத்துக் கூறிக் கொண்டிருக்கும் போது, அந்த வீட்டின் நபர் ஒருவர் கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளோம். கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT