தமிழகம்

கேரளத்தில் தமிழ் வளர்த்த பிஆர்எஸ் 100-வது பிறந்த நாள்: பொதுமுடக்கத்தால் எளிமையாக நடந்த விழா

என்.சுவாமிநாதன்

கரோனா பொதுமுடக்கத்தால் கேரளம் வெறிச்சோடிக் கிடக்கிறது. போக்குவரத்து, ஜனத்திரள் இன்றி அடையாளமே தெரியாமல் இருக்கிறது மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம். அவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் அங்குள்ள தமிழர்கள் தனி மனித விலகலைக் கடைபிடித்து பி.ஆர்.எஸ். என்ற மனிதரை நினைவுகூர்ந்து கலைந்திருக்கிறார்கள்.

யார் இந்த பி.ஆர்.எஸ்.?
பி.ரெத்தினசாமி என்பதன் சுருக்கமே பி.ஆர்.எஸ். நாகர்கோவிலைப் பூர்விகமாகக் கொண்ட இவர் தன் தந்தையின் காலத்திலேயே திருவனந்தபுரத்துக்குச் சென்றுவிட்டார். திருவனந்தபுரத்தில் இருக்கும் தமிழ்ச் சங்கத்துக்கு இவர்தான் 15 சென்ட் இடம் வாங்கி, அதை இலவசமாகக் கொடுத்தார். அதில்தான் இப்போது தமிழ்ச்சங்கம் கம்பீரமாய் நிற்கிறது.

பி.ஆர்.எஸ் கட்டிடக் கலையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர். கேரளத்தின் மிக முக்கியமான கட்டிடங்கள் அனைத்துமே இவர் நிர்மாணித்ததுதான். இதுகுறித்து பி.ஆர்.எஸ்ஸின் மகனும், பொறியாளருமான முருகன் 'இந்து தமிழ்திசை' இணையத்திடம் கூறுகையில், “என்னோட தாத்தா பெருமாளும் கட்டுமானத் துறையில்தான் இருந்தாங்க. 1939-ல், கேரள அசெம்பிளி ஹால் தாத்தா கட்டுனதுதான். தாத்தா பெயரில் நாகர்கோவிலில் ஒரு தெருவே இருக்கு.

எங்க அப்பா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ப்ரி டிகிரி முடிச்சுட்டு, தொடர்ந்து டிப்ளமோ சிவில் படிச்சாங்க. இன்னிக்கு திருவனந்தபுரத்தோட அடையாளமா இருக்குற ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கட்டிடம், ஸ்ரீசித்திரை திருநாள் மெடிக்கல் சென்டரின் ஒரு பிளாக், கேரள தலைமைச் செயலகத்தின் தென்பகுதி, மண்டலப் புற்றுநோய் மையம்னு பல கட்டிடங்கள் அப்பா கட்டுனதுதான்.

கேரளத்தில் கூட்டுறவு வங்கிகளின் தலைமை அலுவலகமான கோ பேங்க் டவர்ஸ் அப்பா கட்டியதுதான். இதுதான் 1995 வரை கேரளத்தில் உயரமான கட்டிடமாக இருந்தது. அதேபோல் அப்பாவிடம் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற தயாள குணமும் இருந்தது. ஏழைகளுக்கும் குறைவான கட்டணத்தில் உயர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரம், கிள்ளிப்பாலம் பகுதியில் பி.ஆர்.எஸ் என்னும் பெயரில் மருத்துவமனையையும் கட்டினார். 50 படுக்கைகளோடு தொடங்கப்பட்ட இது, இன்று 250 படுக்கைகளுடன் திருவனந்தபுரத்தின் முக்கிய மருத்துவமனையாகவும் இருக்கிறது.

தமிழ் மீது அப்பாவுக்கு இருந்த பற்றால் அடிக்கடி டி.கே.சண்முகம், டி.கே.பகவதி சகோதரர்களை அழைத்துவந்து திருவனந்தபுரத்தில் நாடகம் போடுவார். தமிழ் அறிஞர்களை அழைத்து வந்து பட்டிமன்றமும் நடத்துவார். அன்றைய நாள்களில் திருவனந்தபுரத்தில் துடிப்போடு இருந்த கலை மன்றத்திலும் தலைவராக இருந்தார். அதன் மூலம் அவர் செய்த தமிழ்த்தொண்டின் அங்கமாக, தமிழ்ச் சங்கத்துக்கான இடத்தையும் தனது செலவில் வாங்கிக் கொடுத்தார். அவர் மிகவும் நேசித்த தமிழுக்குச் சிறப்பு செய்யும் வகையில் அவரது நூறாவது பிறந்த நாளான இன்று தமிழ் நாடகங்களை நடத்த இருந்தோம். கரோனா பொதுமுடக்கத்தால் அது கைகூடாமல் போய்விட்டது” என்றார்.

SCROLL FOR NEXT