தமிழகம்

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவும் தப்பாட்டக் கலைஞர்: சங்கட நேரத்தில் சக கலைஞனின் மனிதநேயம்

செய்திப்பிரிவு

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு நேசக்கரம் நீட்டி வருகிறார் சக நாட்டுப்புறக் கலைஞரான ராஜா.

மதுரை மாவட்டம் பனையூரைச் சேர்ந்த தப்பாட்டக் கலைஞர் ராஜா. இவர் தமிழகத்தில் தப்பாட்டத்திற்காக கலைமாமணி விருது பெற்ற முதல் கலைஞராவார். நாட்டுப்புறக் கலையின் மீது மட்டுமல்லாமல் தன் சக கலைஞர்கள் மீதும் பெரும் அன்பு வைத்துள்ள ராஜா, பொதுமுடக்கத்தால் வேலையிழந்து நிர்க்கதியாக நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்களைத் தேடிச் சென்று நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜா, “பொதுவாக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மார்ச் முதல் ஜூலை மாதம் வரைதான் நிகழ்ச்சிகள் புக் ஆகும். இந்தக் காலகட்டத்தில்தான் பல திருவிழாக்கள், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். இந்தச் சூழலில் இப்படி வீட்டில் முடங்கிக் கிடப்பது நாட்டுப்புற கலைஞர்களுக்குப் பெரிய துயரம்தான்.

மற்றவர்கள் பொதுமுடக்கம் முடிந்ததும் அவர்கள் வேலையைத் தொடரலாம். ஆனால், நாட்டுப்புறக் கலைஞர்கள் அடுத்த வருட சீசனுக்காகக் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட மாதங்களை அவர்கள் எப்படிக் கடப்பார்கள்? இதையெல்லாம் மனதில் வைத்து அவர்களுக்கு எனது முயற்சியிலும் நண்பர்கள் சிலரது உதவியையும் கொண்டு நிவாரண உதவிகளைச் செய்து வருகிறேன்.

இதுவரை சுமார் 200 குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திருக்கிறேன். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாது எனது சொந்த ஊரில் உணவுக்காகக் கஷ்டப்படும் பிற ஏழைகளுக்கும் என்னால் ஆன உதவிகளைச் செய்து வருகிறேன்.

நாட்டுப்புறக் கலைகள்தான் நமது கலாச்சாரத்தின் அடையாளம் என்கிறார்கள். அந்தக் கலாச்சார அடையாளத்தை அழியாமல் காத்துவருவது நலிவடைந்த கலைஞர்கள்தான். இப்பொழுது அரசாங்கம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 1000 ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், இன்னும் அந்தத் தொகை கைக்கு வந்து சேரவில்லை. அப்படியே அந்தத் தொகை வந்தாலும் அதை வைத்து எத்தனை நாட்களுக்குக் கடத்த முடியும்?

அடுத்த வருடம் நாங்கள் ஆடி சம்பாதித்தால்தான் உண்டு. அதுவரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் காலத்தைக் கடத்த வேண்டும். அரசாங்கம் பெரிய மனதுவைத்து ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைஞருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்” என்றார் ராஜா.

- க.விக்னேஷ்வரன்

SCROLL FOR NEXT