பிஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்கள். 
தமிழகம்

புதுச்சேரியில் தவித்த பிஹார் மாணவர்கள் 23 பேர் அரசுப் பேருந்துகளில் அனுப்பி வைப்பு

செ.ஞானபிரகாஷ்

கலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தில் புதுச்சேரி வந்து ஊரடங்கால் சிக்கிய 23 மாணவ, மாணவிகள் இன்று பிஹாருக்கு அரசுப் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிஹார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் 8 மாணவிகள் உள்ளிட்ட 23 பேர் நவோதயா பள்ளி கலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தின்கீழ் கேரளம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான மாஹேவின் நவோதயா பள்ளிக்கு வந்திருந்தனர்.

மார்ச் மாதம் 21-ம் தேதியன்று தங்களது பயிற்சியை முடித்துவிட்டு பிஹார் திரும்பிச் செல்ல முற்பட்டனர். அப்போது ரயில் ரத்து செய்யப்பட்டு விட்டதால் காலாபட்டில் அமைந்துள்ள நவோதயா பள்ளிக்கு வந்து அந்த 23 மாணவர்களும் தங்கி இருந்தனர். இச்சூழலில் இன்று (மே 5) அவர்களை பிஹாருக்கு இரு தனிப் பேருந்துகளில் அனுப்பி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அவர்களை வழியனுப்பி வைத்த புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், ''பிஹார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மாணவர்கள் புதுச்சேரியில் இருப்பது தொடர்பாகத் தெரிவித்தார். அவர்களை மீண்டும் பிஹார் திரும்ப நடவடிக்கை எடுத்து வந்தார். அதையடுத்து பள்ளி முதல்வர் ராமச்சந்திரனை சந்தித்துக் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்து உதவினோம். ஆட்சியர் அருணைச் சந்தித்து குழந்தைகள் திரும்ப உதவக் கோரினோம். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடவடிக்கையின் பேரில் அவர்கள் திரும்பிச் செல்ல அனுமதி கிடைத்தது.

அதைத்தொடர்ந்து ஆட்சியர் அருண், இக்குழந்தைகள் பிஹார் திரும்பிச் செல்ல பிஆர்டிசி அரசுப் பேருந்துகளை ஏற்பாடு செய்து தந்தார். அதைத் தொடர்ந்து, பேருந்துகளில் இவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம். மாணவர்களுக்குத் தேவையான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி, குடிநீர் உள்ளிட்டவையும் தந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT