காரைக்காலில் பாஜகவினர் கோரிக்கை மனுவை மண் சட்டியில் ஏந்திச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
கரோனா நிவாரண நடவடிக்கையாக மஞ்சள் நிற ரேஷன் அட்டைதார்களுக்கு 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்தார். ஆனால், இதுவரை அரிசி வழங்கப்படவில்லை.
மக்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு உடனடியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க வேண்டும், காரைக்கால் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக வெளிமாநிலப் பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மாவட்ட நிர்வாகம் கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக நிதி வசூல் செய்துள்ளது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட பாஜக தலைவர் துரை சேனாதிபதி தலைமையில் மண் சட்டியில் மனுவை ஏந்திக் கொண்டு காரைக்கால் மாதா கோயில் வீதியிலிருந்து புறப்பட்டுச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிடம் இன்று (மே 50 மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில துணைத்தலைவர் எம்.அருள் முருகன், மாநில செயலாளர் சகுந்தலா சின்னதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.