வேறு மாநிலங்களில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலமாக பயணிப்பதற்கு உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"1. பத்திரிகைகள் விற்பனையில் கடும் சரிவு, விளம்பர வருவாயில் பெரும் இழப்பு இவற்றால் அடுத்த சில மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். 800 பத்திரிகைகளில் 30 லட்சம் பணியாளர்களின் எதிர்காலம் கேள்வுக்குறியாக்கப்பட்டுள்ளது.
2. சர்வதேச தர குறியீட்டு நிறுவனங்களின் கணிப்பின்படி இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று கூறுகிறது. இந்தப் பொருளாதாரப் பேரழிவை எதிர்கொள்ள நிதியமைச்சகம் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறது?
3. இந்திய தொழிலக கூட்டமைப்பின்படி, சுற்றுலாத்துறையில் ரூ.5 லட்சம் கோடி இழப்பு, 4 முதல் 5 கோடி பணியாளர்கள் வேலை இழப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு, 1.5 கோடி தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படும் என்று கூறுகிறது. இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ள மோடி அரசு என்ன தீர்வு வைத்திருக்கிறது?
4. 6.3 கோடி சிறு, குறு, நடுத்தர தொழில் முடக்கத்தினால் 11 கோடி பேர் வேலை இழப்பு. மற்ற வகையில் 12 கோடி பேர் ஏப்ரல் மாத சம்பளத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக கரோனா நோயின் அச்சுறுத்தலினாலும் வாழ்வாதாரப் பாதிப்பினாலும் கடுமையான துன்பத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள ஏழைகளைப் பொறுத்தவரை மக்கள் ஊரடங்கை ஏறத்தாழ ஒரு மரண தண்டனையாகவே கருதுகிறார்கள்.
பெரும்பாலான இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு முழு ஊரடங்கு என்பது பொருளாதாரப் பேரழிவாகும். கைக்கும், வாய்க்கும் எட்டாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு மரணப் போராட்டமாகும்.
உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு கூறியபடி, "மக்கள் ஊரடங்கினால் கரோனா நோய் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்படி கட்டுப்படுத்தப்படாமல் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுபோவது மிகுந்த கவலையைத் தருகிறது.
மேலும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்வது கரோனா நோய் அல்லாமல் பசி, பட்டினி காரணமாக பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று எச்சரிக்கையாக கூறியுள்ளார். இக்கருத்தை எவரும் புறம்தள்ளிவிட முடியாது.
சர்வதேச தர குறியீட்டு நிறுவனங்களின் கணிப்பின்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் எதிர்பார்க்கப்பட்ட 2.5 சதவீதத்தில் இருந்து கரோனா பாதிப்பினால் 0.2 சதவீதமாக வீழ்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிக்கக்கூடியதாகும்.
இத்தகைய வளர்ச்சியின்மையின் காரணமாக அனைத்துத் துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பொருளாதாரப் பேரழிவை எதிர்கொள்ள நிதியமைச்சகம் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறது.
இந்திய தொழிலக கூட்டமைப்பின் அறிக்கையில், சுற்றுலாத்துறையின் இழப்பு ரூ.5 லட்சம் கோடி என்றும் அதனால் 4 முதல் 5 கோடி பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 1.5 கோடி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மோடி அரசு எப்படி சந்திக்கப்போகிறது?
அதேபோல 6.3 கோடி சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் 11 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதைத் தவிர 12 கோடி பேர் ஏப்ரல் மாத சம்பளத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தொழில்துறை நீண்டகால பாதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது.
மூலதனமின்றி முடங்கிக்கிடக்கும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் செயல்பாட்டு மூலதனத்தை உருவாக்கித்தர வேண்டும். இவர்களை பாதிப்பிலிருந்து மீட்க பொருளாதார தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படுகிற பத்திரிகை நிறுவனங்கள் இதுவரை சந்திக்காத வகையில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. விற்பனையில் கடும் சரிவு, விளம்பர வருவாயில் பெரும் இழப்பு ஆகியவற்றால் அடுத்த சில மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் ரூ 4,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 800 பத்திரிகைகளில் 30 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். பத்திரிகை துறையே இன்றைக்கு முடக்கப்பட்டுள்ளது. பத்திரிகை இறக்குமதி செய்யும் நியூஸ் பிரிண்ட் மீது 5 சதவீத சுங்கவரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இத்தகைய கோரிக்கைகள் எதையும் பரிசீலிக்கவோ, தீர்வு காணவோ மத்திய அரசு தயாராக இல்லை.
நான்கு மணி நேர வாய்ப்பு கூட வழங்காமல் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அறிவித்ததன் விளைவாக பல மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் தீர்ந்தபாடு இல்லை. போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை கையில் காசில்லாமல் பசி, பட்டினியோடு நடைபயணமாகவே ஊர் திரும்பவேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
வெளிமாநிலங்களில் உள்ள தமிழக தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கு உரிய போக்குவரத்து வசதிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். இவர்களிடம் எந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது.
மக்கள் ஊரடங்கு 40 நாட்கள் கடந்த பிறகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலை தமிழகத்திலும் பரவி வருகிறது. சென்னையில் பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்புவதற்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இப்பிரச்சினையில் உள்ள நியாயத்தை தமிழக அரசு புரிந்துகொண்டு ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் ஏற்பாடு செய்ததை போல சிறப்பு ரயில்கள் மூலமாக பயணிப்பதற்கு உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.