தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கை யொட்டி அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தி மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து நேற்று காலை முதலே திருச்சி மாநகர சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வாகனங் கள் இயங்கின. கடந்த ஒரு மாதமாக வெறிச்சோடிக் காணப்பட்ட மாநகரின் அனைத்து சாலைகளிலும் நேற்று வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநகரில் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் சாலைகளில் சென்றுவந்த வண்ணம் இருந்தனர்.
இதேபோல, சிவப்பு மண்டலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று 60 சதவீத கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சாலையிலும், கடைகளிலும் குவிந்தனர்.
தஞ்சாவூர் மாநகரில் ஜவுளி, நகை, பாத்திர, செல்போன் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இருசக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் சென்றதால் கரோனா தொற்று மேலும் அதிகம் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
ஊரடங்கு தளர்வால் புதுச்சேரியில் 42 நாட்களுக்குப் பிறகு கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மக்கள் அதிகளவில் தங்கள் தேவைக்காக ஒரே நேரத்தில் வெளியே வந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேரு வீதியில் காலை 9 மணிக்கு கடைகளை வியாபாரிகள் திறந்தபோது போலீஸார் தடுத்தனர். நாளிதழ்களில் வந்த முதல்வரின் அறிவிப்பை வணிகர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கிடையே அண்ணாசாலை, மறைமறை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி, படேல் சாலை என நகரம் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நேரு வீதியிலும் பகல் 11 மணிக்குப் பிறகு கடைகளைத் திறக்க போலீஸார் அனுமதித்தனர்.
அனைத்து கடைகளும் திறக்கப் பட்ட நிலையில், வீட்டிலிருந்து பலரும் ஒரே நேரத்தில் வெளியே வந்ததால் நகரில் முக்கிய சாலை களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு எடுத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் காரைக்கால் நகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
மக்கள் நடத்தை- முதல்வர் வருத்தம்
புதுச்சேரியில் நேற்று சாலைகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டது குறித்து முதல்வர் நாராயணசாமி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
“உத்தரவுகளை மக்கள் கடைபிடிக்காமல் வெளியே வந்து அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மனம் உறுத்தலாக இருக்கிறது. மத்திய அரசு கடைகள், தொழிற்சாலைகளை திறக்கலாம் என்று தெரிவித்தாலும் கூட சில விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்பேரில் ஊரடங்கில் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில், விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் அந்த தளர்வு மக்களை பாதுகாப்பதற்கு ஏதுவாக இருக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.