தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் காணொலி காட்சி மூலமாக நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் நீதிமன்ற பணிகள் கடந்த மார்ச் முதல் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. மே மாதங்களில் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கரோனா காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சிகள் மூலமாக நடைபெற்று வருகின்றன.
இந்த வரிசையில் நாடு முழுவதும் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களிலும் காணொலி காட்சிமூலமாக விசாரணை மேற்கொள்ள மத்திய நிதித் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்கீழ் உள்ள சென்னை, மதுரை, கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு ஆகிய கடன்வசூல் தீர்ப்பாயங்களில் நேற்று (மே 4) முதல் காணொலி காட்சிமூலமாக வழக்குகள் விசாரிக்கப் பட்டு வருகின்றன.
இந்நிலையில் தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் காணொலி காட்சி மூலமாக நீதிபதி டாக்டர் என்.வி.பத்ரிநாத் தீர்ப்பளித்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1996-ல் சென்னையைச் சேர்ந்த மூல்சந்த் நிதி நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிக்காக தி.நகர் பாண்டி பஜார் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கிளையில் கோடிக்கணக்கில் கடன்பெற்றுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனைமறைத்து பலருக்கு குடியிருப்புகளை முறைகேடாக விற்றுள்ளது.
இதனால் வங்கி நிர்வாகம் ரூ.12.25 கோடி இழப்பீடு கோரி மூல்சந்த் நிதி நிறுவனத்துடன் சேர்த்து 63 வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 24 ஆண்டுகளாக சென்னை கடன் வசூல் தீர்ப்பாயம் 2-ல் நிலுவையில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் நீதிபதி டாக்டர் என்.வி.பத்ரிநாத் முன்பாக நடந்தது. அப்போது வங்கி சார்பில் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், மூல்சந்த் நிறுவனத்துக்காக மூத்த வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்காக வழக்கறி ஞர் என்.வி.னிவாசன் ஆகி யோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டாக்டர் என்.வி.பத்ரிநாத் நேற்று காணொலி காட்சி வாயிலாக பிறப்பித்த தீர்ப்பில், ‘‘வங்கி நிர்வாகத்துக்கு ரூ. 11.31 கோடியை 20 சதவீத வட்டியுடன் மூல்சந்த் நிதி நிறுவனமும், சில வீட்டு உரிமையாளர்களும் சேர்ந்து வழங்க வேண்டும். முறையாக பணம் செலுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது.
பாக்கித்தொகை செலுத்த வேண்டிய வீட்டு உரிமையாளர்கள் 45 நாட்களுக்குள் அத்தொகையை வங்கிக்கு செலுத்தி தங்களின் சொத்தை மீட்டுக்கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளார்.