மூன்றாம் முறையாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் இன்று முதல் அமலுக்கு வந்தது. இருந்தபோதும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனைத்து கடைகளும் இன்று காலை முதலே திறக்கத் தொடங்கினர்.
மக்கள் கூட்டம் திண்டுக்கல் நகரின் அனைத்து பகுதிகளிலும் காணப்பட்டது. இருசக்கரவாகனங்கள், கார்கள் போக்குவரத்து அதிக அளவில் இருந்தது. இதனால் திண்டுக்கல் நகரமே எந்தவித கட்டுப்பாடுகள் இன்றி இயல்புவாழ்க்கைக்கு திரும்பியதுபோல் இருந்தது.
மக்களை கட்டுப்படுத்தமுடியாமல் போலீஸார் தவித்தனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்ததால் சில கடைகளுக்கு சீல்வைக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைக்காரர்கள், மக்கள் கடைப்பிடிக்காததால் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி, வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குபின் ஆட்சியர் மு.விஜயலட்சுமி கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மளிகை கடைகள், மருந்துகடைகள், உணவகங்கள் ஆகியவை வழக்கம்போல் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறந்திருக்கலாம்.
கட்டுமானப்பணிகளுக்கான கடைகள், ஹர்டுவேர்ஸ், பெயிண்ட் கடைகள், விவசாயத்திற்கு தேவையான பைப் கடைகள், மோட்டார் கடைகள் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்கலாம்.
மற்ற அனைத்து கடைகளும் மூடியிருக்கவேண்டும். அனுமதிக்கப்பட்ட கடைகளை மீறி பிற கடைகளை திறந்தால் சீல்வைப்பதுடன், அபராதமும் விதிக்கப்படும், என்றார். இதையடுத்து திண்டுக்கல் நகரில் நேற்று காலை திறக்கப்பட்ட அனுமதியில்லாத கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள சலவை, தையல், சலூன் கடை, தேநீர் கடை தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் கருதி கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும் என திண்டுக்கல் ஆட்சியரிடம் நேற்று மனு அளித்து கோரிக்கைவிடுத்தனர்.
இன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்த தொழிலாளர்கள் ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 40 நாட்களாக வேலைக்கு செல்லமுடியாத காரணத்தினால்தங்களது வாழ்வதாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் உணவிற்கே சிரமப்படுவதால் சலவை, தையல், சலூன், தேநீர் கடைகளை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க கடைகளை திறக்க அனுமதி அளிக்கவேண்டும், என தெரிவித்துள்ளனர்.