தமிழகம்

தென்காசி அருகே சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல முயன்ற எஸ்டேட் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

த.அசோக் குமார்

தென்காசி அருகே எஸ்டேட்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல முயன்றபோது அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தென்காசி மாவட்டம், மேக்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ஏலக்காய், கிராம்பு எஸ்டேட்கள் உள்ளன. அந்த எஸ்டேட்களில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். சிலர் குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எஸ்டேட்களில் வேலை பார்க்கும் மக்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக இன்று காலையில், அங்கிருந்து நடந்து வந்தனர். சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து அடவிநயினார்கோவில் அணை அருகே வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் மனோகரன், செங்கோட்டை வட்டாட்சியர் கங்கா உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலா ஒருவர் மற்றும் வேலூர் மாவட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் 5 பேர் என மொத்தம் 74 பேர் இருந்தனர்.

அவர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவதாகவும், அதற்கு வாகன வசதி செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர். தற்போதைய சூழ்நிலையில் பயணத்தைத் தவிர்க்குமாறு கூறிய அதிகாரிகள், அவர்களை பண்பொழியில் உள்ள தனியால் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.

SCROLL FOR NEXT