காரைக்காலில் கடலில் கப்பலில் மின் விளக்குகளை ஒளிரவிட்டு நன்றி செலுத்திய கடலோர காவல் படையினர்
நாடு முழுவது கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் களத்தில் முன்னின்று பணியாற்றி வருகின்றனர். முப்படைகள் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (மே 3) நாடு முழுவதும் நடைபெற்றது. விமானங்களிலிருந்து மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்பட்டன.
அதன் ஒரு நிகழ்வாக நேற்று இரவு காரைக்கால் கடல் பகுதியில் கரையிலிருந்து சுமார் 2 கடல் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி துர்காவதி கப்பலை மின் விளக்குகளால் அலங்கரித்து, ஒளிரச் செய்து கடலோர காவல் படை வீரர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு நன்றி செலுத்தினர்.
கப்பலிலிருந்து சிக்னல் பிஸ்டல் மூலம் நிகழ்த்தப்பட்ட வண்ண ஒளி நிகழ்வு கண்களை கவரும் வகையில் இருந்தது.