தமிழகம்

விருதுநகரில் 6-ம் தேதிக்குப் பிறகு உரிய அனுமதி பெற்று தொழிற்சாலைகளைத் தொடங்கலாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இ.மணிகண்டன்

விருதுநகரில் நாளை மறுநாள் (6-ம் தேதிக்குப்) பிறகு உரிய அனுமதிபெற்று தொழிற்சாலைகள் இயங்கலாம் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, அச்சகம், தீப்பெட்டி, நுற்பாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் மற்றும் நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு வழிகாட்டுதல் படி தொழில்சாலைகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் தொடங்குவது குறித்து அரசு வழிகாட்டுதல்படி மாவட்ட ஆட்சியர் நாளை அறிவிப்பு வெளியிடுவார்.

அதைத்தொடர்ந்து 6-ம் தேதி முதல் படிப்படியாக பட்டாசு, தீப்பெட்டி, ஜவுளி, தரி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட தொழில்களைத் தொடர நிபந்தனைகளோடு அனுமதியளிக்கப்படும். வியாபரிகள் வியாபாரங்களைத் தொடங்கலாம்.

தொழிற்சாலைகளுக்கு பேருந்தில் செல்லும் தொழிலாளர்கள் ஒரு இருக்கை விட்டுதான் அமர வேண்டும். 3 பேர் சீட்டில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும். அதற்கும் அனுமதி பாஸ் வாங்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை பெறுவதற்கும் பாஸ் வாங்க வேண்டும். ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது.

ஆவின் பணியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

SCROLL FOR NEXT