பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கோயம்பேட்டிலிருந்து வந்த 129 பேருக்கு கரோனா; கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு

ந.முருகவேல்

கோயம்பேட்டிலிருந்து கடலூருக்கு வந்த 129 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் கரோனா வைரஸ் தொற்று குறித்துப் பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனை பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து அங்கு தொழிலில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் கடந்த வாரம் அவரவர் சொந்த ஊருக்கு லாரிகள் மூலமும், இலகுரக வாகனங்கள் மூலமும் திரும்பினர். அவ்வாறு திரும்பியவர்களில் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது சென்னை பரிசோதனை மூலம் தெரிவந்தது.

இதையடுத்து, சென்னையிலிருந்து கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்களது இருப்பிடம் கண்டறியப்பட்டு இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்து 27 பேரைக் கண்டறிந்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 7 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்குத் திரும்பிய 550 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அந்தப் பரிசோதனையின் முடிவில் ஒரே நாளில் 107 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்களில் 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 430 பேரின் பரிசோதனை முடிவு நாளை வெளியாகும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31 பேருடன் சேர்த்து, கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களில் 129 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 4,931 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 160 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 26 பேர்.

SCROLL FOR NEXT