அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 பேர் உட்பட 24 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டநிலையில், மொத்தமாக 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேலையின்றி, உணவின்றிக் கஷ்டப்பட்டதால் சொந்த ஊருக்கு கடந்த சில தினங்களாக வந்துள்ளனர்.
இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னையிலிருந்து வந்தவர்களைக் கண்டறிந்து ரத்த மாதிரிகள் சேகரித்து சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், கடந்த இரண்டு தினங்களாக பாதிக்கப்பட்டோர் 20 பேர் எனத் தெரியவந்தது.
இந்நிலையில், இன்று (மே 4) வந்த முடிவில் சென்னையிலிருந்து அரியலூர் வந்த 20 பேருக்கும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 3 பேர், உதவி செவிலியர் ஒருவர் என 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேற்கண்ட 24 பேரும் திருச்சி மற்றும் அரியலூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, அரியலூர் மாவட்டத்தில் 28 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற அனைவரும் திருச்சி மற்றும் அரியலூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.