தமிழகம்

சுவர் மற்றும் மரம் விழுந்து பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செய்திப்பிரிவு

மழையால் சுவர் மற்றும் மரம் விழுந்ததில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்றுவெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் செங்கப்பட்டியைச் சேர்ந்த சிகப்பாயி, அவரது மகன் சிவா, திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த சின்னான், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் ஆகியோர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். மேலும், சேலம் சங்ககிரியைச் சேர்ந்த மொட்டையம்மாள், குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் ஆகியோரும் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் வட்டக்கானல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பெரிய மரம் சாய்ந்து விழந்ததில் பெங்களூரைச் சேர்ந்த சுரேகா, பெரம்பலூரைச் சேர்ந்த வினோத், கடலூரைச் சேர்ந்த இளங்கோ ஆகியோர் இறந்தனர்.

சுவர் மற்றும் மரம் விழுந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT