தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் துளியும் இல்லாமல் செய்யாறு அருகே உள்ள காழியூர் ஏரியில் மீன்பிடிக்கும் கிராம மக்கள். 
தமிழகம்

ஊரடங்கை மீறி குடும்பம் குடும்பமாக ஏரியில் மீன்பிடித்த கிராம மக்கள்

செய்திப்பிரிவு

செய்யாறு அருகே ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பம் குடும்பமாக சென்று ஏரியில் கிராம மக்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காழியூர் கிராம ஏரியில் காழியூர், அத்தி, புளியரம்பாக்கம், வெங்கட்ராயன்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், குடும்பம் குடும்பமாக சென்று மீன் பிடிக்கின்றனர். இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும், கரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல், முகக்கவசம் அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காமல் மீன்பிடித்து வந்தனர்.

இதையறிந்த செய்யாறு போலீஸார் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வருவதை தெரிந்துகொண்ட மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மீன்பிடி வலைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை கொண்டு செல்லாமல் அங்கேயே விட்டுவிட்டனர். இவற்றை பறிமுதல் செய்த போலீஸார், வாகனப் பதிவு எண்களைக் கொண்டு சுமார் 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT