தமிழகம்

மத்திய பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை- காரைக்கால் ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் நவோதயா பள்ளியில் உள்ள காரைக்கால் மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா கூறியுள்ளார்.

காரைக்காலில் இன்று(மே 3) அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசால் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டம் பச்சை மண்டலமாக உள்ளது. இந்நிலையில் பச்சை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஊரடங்கு தளர்வுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் அடிப்படையிலான நடைமுறைகள் உள்ளூர் சூழலுக்கேற்ப காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

மருத்துவம், மற்றும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. மாவட்ட எல்லைப் பகுதிகளில் முந்தைய நிலையே பின்பற்றப்படும். மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் தற்போதைக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாது. கடைகள் திறப்பது தொடர்பாக வணிகர்கள் உரிய அமைப்பிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று திறக்கலாம்.

மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்த மக்கள் நடமாட்டம், போக்குவரத்துக்கு அனுமதியில்லை. மதுக்கடைகளை திறப்பது குறித்து புதுச்சேரி அரசுதான் முடிவெடுக்க வேண்டும். கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்ததாக காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை.

மத்திய பிரதேசம் மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள நவோதயா பள்ளியில் படித்து வரும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 17 மாணவ, மாணவிகளுக்கு தேவையான வசதிகள், மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை செய்யப்படுவது குறித்து அந்த மாவட்ட ஆட்சியருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மாணவர்களை பாதுகாப்பாக காரைக்காலுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT