தமிழகம்

கோவில்பட்டியில் வறுமையில் வாடும் மாணவர்களின் குடும்பத்துக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி அருகே வறுமையில் வாடும் மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தினசரி சம்பளம் பெற்றுவந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளின் குடும்பம் குறித்து தலைமை ஆசிரியர் கி.சீனிக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர், தனது பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களிடம் பேசி, வறுமையில் வாடும் மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்தார்.

மேலும், நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி, ஊராட்சிகளில் வறுமையில் வாடும் குடும்பங்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என 100 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க தலைமை ஆசிரியருடன் இணைந்து, ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கினர்.

இதனை நேற்று நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி, தலைமை ஆசிரியர் சீனி ஆகியோர் வறுமையில் வாடும் மாணவர்களின் பெற்றோர், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில், நாலாட்டின்புதூர் ஊராட்சி தலைவர்கள் கடல்ராணி, கண்ணாயிரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ச.மயில், வட்டார செயலாளர் மு.க.இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் 40 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டியில் நகர பாரதிய ஜனதா தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏழைகளுக்கு மோடி கிட் வழங்கப்பட்டது. மேலும், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT