தமிழகம்

சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டும் பயனில்லை: ரேஷன்கடைகளுக்கு அரிசி அனுப்பாததால் அதிருப்தி

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டும், இன்று ரேஷன்கடைகளுக்கு அரிசி அனுப்பாததால் விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தமிழக ரேஷன்கடைகளில் மாதந்தோறும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையின்றி உணவிற்கு சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா என்ற சிறப்புத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் சிறப்புத் திட்டத்திற்கான அரிசி ஒதுக்கீடு தாமதமாக வந்ததால், அதற்குரிய அரிசியை அட்டைதாரர்களுக்கு வழங்கவில்லை.

இதையடுத்து மே மாதத்தில் மாதந்தோறும் வழங்கும் அரிசி, மே மாத சிறப்புத் திட்டத்திற்குரிய அரிசி மற்றும் கடந்த ஏப்ரலில் விடுப்பட்ட சிறப்புத் திட்டத்திற்குரிய அரிசியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும். மீதி 50 சதவீதத்தை ஜூனில் வழங்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக குடோன்களில் இருந்து அனைத்து ரேஷன்கடைகளுக்கும் 60 சதவீத அரிசியை மே 3 தேதிக்குள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 1-ம் தேதி தொழிலாளர் தினம் போன்ற காரணங்களால் சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன்கடைகளுக்கு அரிசி செல்லவில்லை.

இதையடுத்து மே 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் குடோன்களில் இருந்து ரேஷன்கடைகளுக்கு அரிசி அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் நேற்று குடோனின் இருந்து கடைகளுக்கு அரிசி அனுப்பாததால் விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து ரேஷன்கடை விற்பனையாளர்கள் கூறியதாவது: மே 4-ம் தேதி முதல் அரிசி விநியோகிக்க உள்ளோம். பல கடைகளுக்கு அரிசி வரவில்லை. ஏற்கனவே தேதி குறிப்பிட்டு டோக்கன் கொடுத்துள்ளநிலையில் அரிசி விநியோகிக்காவிட்டால் அட்டைதாரர்கள் எங்களிடம் தான் பிரச்சினை செய்வர்.

இதை தவிர்க்க தான் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமையும் அரிசியை கடைகளுக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் அதனை நுகர்பொருள் வாணிபக கழக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை , என்று கூறினர்.

நுகர்பொருள் வாணிபக கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ விடுமுறை நாள் என்பதால் லோடுமேன்கள் வரவில்லை. இதனால் அரிசி அனுப்ப முடியவில்லை,’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT