சேலத்தில் கரோனா வைரஸ் தாக்குதலில் சிகப்பு பட்டியலில் இருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாறியதற்கு உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்களை கைதட்டி உற்சாகம் செய்த பொதுமக்கள், சேலத்தை பச்சை பட்டியலுக்கு கொண்டு வர உறுதி மொழி ஏற்றனர்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலால் 2500-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதித்த மாவட்டங்களை மத்திய அரசு, சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை பட்டியலிட்டு, ஊரடங்கு விதி விலக்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 40 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் சிகப்பு பட்டியலில் இருந்த சேலம் மாவட்டம், தற்போது ஆரஞ்சு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பால் சேலத்தில் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சிகப்பு பட்டியிலிருந்து ஆரஞ்சு பட்டியலில் மாறியதற்கு அயராது உழைத்த மருத்துவர்கள் செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து, அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகமாக கைத்தட்டி மகிழ்ச்சியையும், வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு காவல் சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர் ஆனந்தகுமார், காவல் ஆய்வாளர் பொன்ராஜ் காவேரி, தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கைகளை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும், சேலம் மாவட்டத்தை ஆரஞ்சு பட்டியலிலிருந்து, பச்சை பட்டியலுக்கு மாறுவதற்காக ஒத்துழைப்பு வழங்குவதாக பொதுமக்களும் விவசாயிகளும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.