திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் நடைபெறும் கோடைவிழா மலர்கண்காட்சி இந்த ஆண்டு ரத்துசெய்யப்படவுள்ளது.
கோடைகாலத்தில் கொடைக்கானல் வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் அரசால் கோடைவிழா நடத்தப்படும்.
இதில் மலர்கண்காட்சி, படகுபோட்டி, விளையாட்டுபோட்டிகள், வாத்துபிடிக்கும்போட்டி, படகு அலங்காரப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து விடுதிகளில் தங்க யாரையும் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்தே அரசு ஊரடங்கை பிறப்பித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்றுவரை கொடைக்கானல் மலைப்பகுதிகளில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.
கொடைக்கானலில் மே மாதம் இறுதியில் கோடைவிழா மலர்கண்காட்சியுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். மலர்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் கொடைக்கானலுக்கு வருவர்.
மே 17 க்கும் பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட்டம் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் நிலை உள்ளது. எனவே இந்த ஆண்டு கொடைக்கானலில் கோடைவிழா, மலர்கண்காட்சி நடைபெற சாத்தியகூறுகள் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.
கோடை விழா முழுமையாக ரத்து என்பது குறித்த அறிவிப்பு மாநில தலைமையிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்ட பிறகே முறையான அறிவிப்பு வெளியாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் கோடைவிழா மலர்கண்காட்சி நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.