"சமூக விலகலைப் பின்பற்றாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரி ஒருவருக்கு தொற்று வந்துள்ளதால் கரோனா நமக்கு பாடம் கற்றுத்தந்துள்ளது. இனியாவது சமூக விலகலைப் பின்பற்றுங்கள்" என, அமைச்சர் ஆர்பி. உதயகுமார் வலியுறுத்தினார்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கரோனா தடுப்பு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் டிஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதன்பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்க, முதல்வரின் வழி காட்டுதலில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு பக்கம் நோய் பாதிப்பு இருந்தாலும், மற்றொரு புறம் சிகிச்சைக்குப்பின், குணமடைந்து வீடு திரும்பு வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உயிரிழப்பும் குறைந்துள்ளது.
இதற்கெல்லாம் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கையே காரணம். இதன்மூலம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் செயல்படுகிறது என்ற தகவலும் வெளிவருகிறது.
ஒருங்கிணைப்பு, மருத்துவம், நிபுணர் குழுக்களின் அறிவுரைகளைப் பரிசீலித்து மே17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு இல்லை என்றாலும், சில இடங்களில் வேளாண்மை, கட்டுமானம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் எவ்வித தடையுமின்றி செயல்பட விதிமுறைகளுடன் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் மீண்டும், மீண்டும் இந்த ஊரடங்கு நீடிக்கப்படுகிறது,
மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனாலும், சவால்கள், நெருக்கடிகளைத் தாண்டி ஊரடங்கிற்கு ஒத்துழைக்கும் மக்களுக்கும், அத்தியாவசியப் பணியாளர்களுக்கும் அமைச்சரவையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்கள் நோய்த் தொற்றில் இருந்து விடுபடுவதாக தொடர்ந்து தகவல் வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களும் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு அரசு செயல்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரி ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. கரோனா நமக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது. சமூக விலகல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட மருத்துவக் கட்டுபாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் துரிதமாக வெளியில் வருவோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.