கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டு 63 ஆண்டுகளில் முதல் முறையாக முற்றிலும் வறண்டு போய் காட்சியளிக்கிறது. 2 மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து முற்றிலும் நின்றதால், கிருஷ்ணகிரி அணை வறண்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பெரியமுத்தூர் என்னுமிடத்தில், கிருஷ்ணகிரி அணை கட்டும் பணியை முன்னாள் முதல்வர் காமராஜர், கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 52 அடி உயரம் கொண்ட அணையில் இருந்து 1957-ம் ஆண்டு முதல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. கடந்த 62 ஆண்டுகளில் பாசன பரப்பு 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அணையின் முதல் மதகு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி உடைந்தது. இதனை அகற்றிவிட்டு, கடந்த 2018-ம் ஆண்டு புதிய மதகு பொருத்தப்பட்டது. இதையடுத்து ரூ.19 கோடி மதிப்பில் மீதமுள்ள 7 மதகுகளையும் மாற்றிமைக்கும் பணி நடந்து வருகிறது.
அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும், 2 மாதங் களுக்கும் மேலாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர்வரத்து முற்றிலும் நின்றதாலும் கடந்த 63 ஆண்டுகளில் முதன்முறையாக கிருஷ்ணகிரி அணை தற்போது முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. அணையில் இருந்து அனைத்து தண்ணீரும் வெளியேறியதால், சேறு மட்டுமே தேங்கி நின்றது.
இதனால் அதை சுத்தம் செய்வதற்காக 2 நாட்களுக்கு முன்னர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 180 கனஅடி நீரை திறந்துவிட்டனர்.
அந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணைக்கு வந்த பின்னர், அதனை ஆற்றில் திறந்தனர். மேலும் இடது புறக்கால்வாயின் பின் பகுதியில் தேங்கியுள்ள மண்ணை, பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 29 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தபடி வெளியேறி வருகின்றன.