ஊரடங்கு உத்தரவு மே.17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கில் தளர்வு, தடை குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதில் பொதுவான தடைகள் நீக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று நடந்த அமைச்சரவையின் நீண்ட கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்திற்கு தனியாக சில முடிவுகளும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுவான தடை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மே 17 வரையிலும் நீட்டிக்கப்படுகிறது. அதுகுறித்து தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அது குறித்த விவரம்:
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.
2. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
3. திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.
4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
5. பொதுமக்களுக்கான விமான, ரயில், பொதுப் பேருந்து போக்குவரத்து.
6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயக்கம்
7. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
8. மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.
9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
11. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.