பாதிக்கப்பட்ட 12 பேரும் குணமானதால் கரோனா இல்லாத மாவட்டமானது சிவகங்கை. மேலும் 12 நாட்களாக புதிதாகத் தொற்று ஏற்படவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்குக் கரோனா தொற்று இருந்தது. இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 20 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஏற்கெனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் என 21 பேர் குணமடைந்தனர். இன்று (மே 2) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் குணமடைந்தனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனாள், முகமது ரபீக், சுகாதாரத் துணை இயக்குநர் யசோதாமணி பொன்னாடை அணுவித்து வழியனுப்பி வைத்தனர்.
தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 12 பேரும் குணமடைந்த நிலையில், கடந்த 12 நாட்களாக கரோனா தொற்றும் இல்லை. இதனால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது.
இதையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கூறுகையில், "கடந்த 2 மாதங்களில் 4,654 பேர் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்தோம். தற்போது 306 பேர் மட்டுமே கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும், 1,461 நபர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் பாதிப்பு கண்டறியப்பட்ட 12 பேரும் குணமடைந்தனர். மேலும், தொடர்ந்து கரோனா பாதித்த பகுதிகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்" என்று கூறினார்.