திரைப்பட இயக்குநரும் நடிகருமான அழகம்பெருமாள் குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இன்னும் சொல்லப்போனால் பறக்கை கிராமத்தில் எனது தெருவைச் சேர்ந்தவர்.
இன்று காலையில் திடீரென சென்னையிலிருந்து என்னைத் தொடர்பு கொண்ட அவர், நாகர்கோவில் பகுதியில் கரோனா நிலவரம் குறித்து அக்கறையுடன் விசாரித்தார். அவரது பேச்சின் ஊடே ஒரு கேள்வியும் வந்து விழுந்தது. “ஊர்ல இருந்தா எங்க வீட்ல இருந்து தாமரைக்குளம் வரைக்கும் நடைப்பயிற்சி போவேன் பாத்துக்கோ. அதுல அந்த ஆலமூடுகிட்ட ஒரு ஒத்தக் குடிசை வீடு உண்டுமே கண்டுருக்கியா?” என்றார்.
“ஆமா... தள்ளுவண்டியில் போய் அயர்ன் பண்றவருதானே. அவரும்கூட முடியாதவர்தான்” என்றேன்.
உடனே, ஒரு எட்டுப்போய் அவரைப் பார்த்துட்டு வரகழியுமா? ஏதாச்சும் உதவி தேவைப்படுதான்னு பார்த்து சொல்லுடே.” என நாஞ்சில் நாட்டின் மண் மனம் மாறாத அவரது குரலில் கேட்டு நின்றது அந்த அலைபேசி அழைப்பு.
குடிசைவாசியான சண்முகவேலை உடனே போய்ச் சந்தித்தேன். “தள்ளுவண்டியை நானும், வீட்டம்மாவுமா தெருத் தெருவா தள்ளிட்டுப்போய் அயர்ன் பண்ணிகிட்டு இருக்கோம். பொதுமுடக்கத்தால மக்களே வெளியே போகல. இதுல எங்களுக்கு ஏது பிழைப்பு? நாலுபேரு வெளியே போக, வர இருந்தாத்தானே தேய்ச்சுப் போடுவாங்க.
தொழில் முடங்கிப்போச்சு. சில இளைஞர்கள் தினமும் மதியம் சாப்பாடு கொடுக்குறாங்க. எங்க நிலமையைப் பார்த்துட்டு கூடுதலா ஒரு பார்சல் கொடுப்பாங்க. அதை ராத்திரிக்கு வைச்சுப்போம்” என சண்முகவேல் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த குடிசை வீட்டில் இருந்து நாய் குரைத்தது.
“ம்ஹூம்... இவனுக்குத்தான் ரொம்ப கஷ்டம். கயித்தை அவுத்துவிட்டா எங்கையாச்சும் போய் கிடைச்சதைச் சாப்பிட்டுட்டு திரும்பி வந்திருவான்” என்றார். சண்முகவேலுக்கு குடும்ப அட்டை இல்லாததால் அரசு அறிவித்த நிவாரணமும் ரேஷன் பொருட்களும் கிடைக்கவில்லை. தன்னார்வலர்கள் யாரும் உதவினால்தான் அன்றைய பசி அடங்கும் என்ற நிலையை, அழகம்பெருமாளுக்கு போனில் அழைத்துச் சொன்னேன்.
அடுத்த சில நிமிடங்களில் அரிசி, மளிகைப்பொருள்கள் உள்பட ஒரு மாதத்துக்கு அந்த குடிசைவாசிக்குத் தேவையான பொருள்களை உள்ளூரிலேயே இருக்கும் கடையின் மூலம் கிடைக்கச் செய்தார் அழகம்பெருமாள். இதேபோல் வேறு சிலருக்கும் சென்னையில் இருந்தவாறே இப்படி மளிகைப் பொருள்கள் வழங்கி உதவியிருக்கிறார் அழகம்பெருமாள்.