தமிழகம்

டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

செய்திப்பிரிவு

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணை யில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்றுமுன்தினம் இரவு கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து, நேற்று காலை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப் பட்டது.

இதையொட்டி, நேற்று காலை 11 மணியளவில் கல்லணையில் உள்ள ஆஞ்சநேயர், கருப்பண்ண சாமி, விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், ரா.காமராஜ், கே.ஏ.ஜெயபால், என்.சுப்பிரமணி யன், சி.விஜயபாஸ்கர், பூனாட்சி, மாவட்ட ஆட்சியர்கள் என்.சுப்பை யன் (தஞ்சை) மா.மதிவாணன் (திருவாரூர்), எஸ்.பழனிசாமி (நாகை) கே.எஸ்.பழனிசாமி (திருச்சி), பொதுப் பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன், எம்எல்ஏக்கள் எம்.ரங்கசாமி, எம்.ரத்தினசாமி, ஆர்.துரைக் கண்ணு, விவசாய சங்க நிர்வாகி மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் உள்ளிட்டோர் காவிரி ஆற்றின் மதகுகளை திறந்து வைத்து, விதை நெல்லை ஆற்றில் தூவினர். தொடர்ந்து வெண்ணாறு, கல்லணைக் கால் வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர், அமைச்சர் வைத்தி லிங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தற்போது மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் தலா 4,000 கனஅடி, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆற்றில் தலா 1,000 கனஅடி வீதம் மொத்தம் 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர், காவிரி பாசனப் பகுதி ஆறுகளின் கடைமடைப் பகுதியை அடைந்தவுடன், காரைக் கால் பாசனப் பகுதிக்கு உரிய நீர் அளிக்கப்படும். கொள்ளிடத்திலும் உரிய அளவில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த நீரைக் கொண்டு தஞ்சை மாவட்டத்தில் 2,66,875 ஏக்கர், திருவாரூரில் 3,75,250 ஏக்கர், நாகை மாவட்டத்தில் 3,47,250 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

SCROLL FOR NEXT