பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஊரடங்கால் உணவகங்கள், டீக்கடைகள் அடைப்பு; கால்நடை வளர்ப்போர் உற்பத்தி செய்யும் பால் மீதமாகாமல் எங்கே போகிறது?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இந்தியாவின் பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் குஜராத் முதல் இடத்திலும், கர்நாடகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 55 சதவீதத்திற்கும் மேல் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சுமார் 10.42 லட்சம் லிட்டர் பால் விற்பனைக்குப் போக, மீதி வெண்ணைய், நெய், இனிப்பு வகைகள் என்று இதர பால் பொருட்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் வழக்கம்போல் பால் உற்பத்தி நடந்தாலும், முன்போல் அதற்கான தேவை அதிகமாக இல்லை. உணவகங்கள், டீக்கடைகள் 100 சதவீதம் அடைக்கப்பட்டுள்ளன. பால் பொருட்கள் அளவு உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்றுமதியும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், இதற்காக உபயோகிக்கப்பட்ட பால் மீதமாகவில்லை. அதனால், உற்பத்தியாகிற பால் எங்கே போகிறது, எந்தெந்த வகைகளில் மீதமாகாமல் பால் பயன்படுத்தப்படுகிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, பாலமேடு தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவர் சுரேஷ் கூறுகையில், "பொதுவாக கோடை காலத்தில் 30 சதவீதம் வரை உற்பத்தி குறையும். அப்போது இயல்பாகவே விவசாயிகள் பால் கறப்பதையும் குறைத்துக் கொள்வார்கள்.

தற்போது, உணவகங்கள், டீக்கடைகளுக்கான பால் தேவை குறைந்ததால் ஆவின் மற்றும் பிற தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலை, அதிக நாள் சேமித்து வைக்க முடியாது என்பதால் அப்படியே பால் பொருட்களாகத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதனால், பால் விலை குறையாமல் வழக்கம்போல் உள்ளது. குறிப்பாக தற்போது பாலில் இருந்து நெய், வெண்ணெய், பால்கோவா, தயிர் உள்ளிட்ட பல்வேறு வகை பால் பொருட்கள் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கிப்போய் இருப்பதால் நெய், தயிர் போன்ற பால் பொருட்கள் தேவை முன்பை விட அதிகரித்துள்ளது.

நெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களைத் தயாரித்து உடனுக்குடன் விற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஸ்டோர் செய்து நீண்ட நாள் பயன்படுத்தலாம். அதனால், பால் நிறுவனங்கள், பால் பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

வீட்டில் அனைவரும் இருப்பதால்...

மாலை நேரங்களில் டீ, காபி போடுவதற்காக பால் தேவை அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் பால் தேவை குறைந்து இந்தத் தொழிலில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிற நிலை ஏற்பட்டது. அதன் பிறகு நிலைமை சீரடைந்து உற்பத்தியாகிற பால் வீணாகாமல் மக்களால் பால் பொருட்களாக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது" என்றார்.

அலங்காநல்லூர் கால்நடை வளர்ப்பாளர் பார்த்திபன் கூறுகையில், " ‘ஊரடங்கால் பாக்கெட் பால் விநியோகம், அதன் சில்லறை விற்பனை குறைந்துள்ளது. அதனால், கிராமங்களில் மக்கள் முன்போல் பசும் பாலை விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர்.

நான் 16 பசு மாடுகளை வளர்க்கிறேன். இதில், தற்போது 11 மாடுகளில் ஒரு நாளைக்கு 110 லிட்டர் பால் கறக்கிறேன். ஊரடங்குக்கு முன்பு நான் உற்பத்தி செய்கிற பாலை, அக்கம்பக்கத்தில் சில்லறைக்கு விற்றதுபோக தனியார் பால் நிறுவனங்களிடம் விற்பனை செய்வேன். நான் எந்தக் கலப்படமும் இல்லாமல் விற்பதால் லிட்டருக்கு சில்லறை விற்பனையில் 46 ரூபாய்க்குக் கொடுப்பேன். பால் நிறுவனங்கள், அவ்வளவு விலைக்கு வாங்க மாட்டார்கள். அவர்கள் 24 ரூபாய்க்குதான் வாங்குவார்கள்.

சில்லறை விற்பனைக்குப்போக மீதமுள்ள பாலை அழிக்க முடியாதே, கெட்டுப்போய்விடுமே என்று வேறு வழியில்லாமல் தனியார் பால் நிறுவனங்களிடம் விற்பேன். ஒரு கட்டத்தில் பால் உற்பத்தி அதிகமானால், அதை விற்க முடியாமல் ஒரு சில கறவை மாடுகளைக் கூட விற்றுள்ளேன்.

ஆனால், தற்போது பாக்கெட் பால் விற்பனை குறைந்துள்ளதால் உற்பத்தி செய்கிற பால் அனைத்தையும் உள்ளூரிலே சில்லறை விற்பனைக்கே விற்று விடுகிறேன். தனியார் பால் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் பால் கூட விற்பதில்லை" என்றார்.

SCROLL FOR NEXT