இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

உணவின்றித் தவிப்போர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: முத்தரசன்

செய்திப்பிரிவு

மதுபானக் கடைகளைத் திறக்கும் எண்ணத்தைத் தமிழக அரசு கைவிட்டு, உணவின்றித் தவிப்போர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 2) வெளியிட்ட அறிக்கையில், "கோவிட்-19 வைரஸ் நோய் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு மூன்றாவது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கை மே 17 வரை நீட்டித்துள்ளது.

இந்த அறிவிப்பில் கோவிட்-19 பாதிப்பின் அளவையும், வீச்சையும் பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களில் மாவட்டங்களை வகைப்படுத்தி உள்ளனர். மாவட்டத்திற்கு மாவட்டம் வெவ்வேறு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நோய் பெருந்தொற்று பரவல் அபாயத்தில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்து, வியாபாரத்தைத் தொடரலாம் எனக் கருதுவதாகவும், மதுபானக் கடைகள் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுக்கலாம் என்பதை வாய்ப்பாகப் பயன்படுத்தி மதுக்கடைகளைத் திறக்க மாநில அமைச்சரவை முடிவு எடுக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.

கோவிட்-19 நோய் பெருந்தொற்றுத் தாக்குதலை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வராமல் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அவசரப்பட்டு திறப்பது, இதுவரை எடுத்து வந்து நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி, கோவிட்-19 நோய் பெருந்தொற்று பரவலுக்கு பச்சைக் கொடி காட்டும் குற்றச் செயலாகிவிடும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றாலும், நோய் பெருந்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் நாடு முடக்கம் நீடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று மத்திய, மாநில அரசுகள் கருதலாம். ஆனால் 40 நாள் நாடு முடக்கத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் நிலை குலைந்து போயிருப்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் உடல் உழைப்புத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், சாலையோர வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அமைப்பசாராத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினர் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் குறைந்தபட்ச நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும்.

கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கும் எண்ணத்தை தமிழ்நாடு அரசு கைவிட்டு, உணவின்றித் தவிப்போர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கோவிட்-19 நிவாரண நிதி வழங்க வேண்டும்" என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT