மாணவிக்குப் பிறந்த நாள் கொண்டாடிய தன்னார்வலர்கள். 
தமிழகம்

ஊரடங்கால் பிறந்த நாள் கொண்டாட முடியாமல் கவலைப்பட்ட இருளர் இன மாணவி; கேக் வெட்டி ஆசையை நிறைவேற்றிய தன்னார்வலர்கள் 

அ.முன்னடியான்

புதுச்சேரியில் ஊரடங்கால் பிறந்த நாள் கொண்டாட முடியாமல் கவலைப்பட்ட இருளர் இன மாணவிக்குத் தன்னார்வலர்கள் கேக் தயார் செய்து, அதனை வெட்டச் செய்து அவரது ஆசையை நிறைவேற்றினர்.

புதுச்சேரி மாநிலம் பாகூர் சித்தேரி செல்லும் வழியில் அமைந்துள்ள இருளர் இனக் குடியிருப்பைச் சேர்ந்த விஜயன்-கற்பூரவள்ளி தம்பதியின் மகள் நிவேதா. அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆண்டுதோறும் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய நிவேதா, தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பிறந்த நாளைக் கொண்டாட முடியாமல் கவலை அடைந்தார்.

இதனைக் கவனித்த, புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் உணவினை வழங்கி வரும் நீர்நிலை பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, தன்னால் பிறந்த நாள் கொண்டாட முடியாததைக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தன்னார்வலர்கள் பேக்கரி நடத்தி வரும் தனக்குத் தெரிந்த நண்பரைத் தொடர்பு கொண்டு சம்பவத்தைத் தெரிவித்து வீட்டில் கேக் தயாரித்துள்ளனர்.

பின்னர், கேக்குடன் மாணவியின் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் முன்பு, அப்பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து வந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கேக் வெட்டி மாணவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 'ஹேப்பி பர்த்டே' பாடலைப் பாடியும் சிறுமியை மகிழ்வித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.

இதுகுறித்து நீர்நிலை பாதுகாப்புக் குழுவின் தலைவர் தன்னார்வலர் அசோக்குமார் கூறும்போது, "புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் உணவினை கிராமப்புறங்களில் எங்கள் குழுவின் மூலம் மூன்று வேளையும் வழங்கி வருகிறோம். அதுபோல், பாகூர் சித்தேரி செல்லும் வழியில் அமைந்துள்ள இருளர் இனக் குடியிருப்பு மக்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து கொடுத்து வருகிறோம்.

அதுபோல் ஒருநாள் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாணவி நிவேதா அழுதுகொண்டு கவலையாக இருந்தார். அவரிடம் விசாரித்தோம். அப்போது பிறந்த நாள் கொண்டாட முடியாததால் அவர் சோகத்துடன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பேக்கரி நடத்தி வரும் நண்பர் ஒருவரிடம் இதுபற்றிக் கூறி வீட்டிலேயே கேக் தயார் செய்து எடுத்து வந்து எங்கள் குழுவின் தன்னார்வலர்கள், பாகூர் துணை வட்டாட்சியர் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரையும் அழைத்து தனிமனித இடைவெளியுடன் மாணவிக்குப் பிறந்த நாள் கொண்டாடினோம். இதனால் அந்த மாணவி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எங்களுக்கும் மாணவியின் ஆசையை நிறைவேற்றியது மனநிறைவாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT