விழுப்புரத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் கோயம்பேட்டிலிருந்து வந்த 200 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றால் இன்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் சென்னை, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள். 54 பேரில் குணமடைந்த 27 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, செஞ்சி, கப்பியாம்புலியூர், அரசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் கோயம்பேட்டிலிருந்து வந்த சுமார் 200 பேர் கரோனா பரிசோதனைக்காகத் தங்க வைக்கப்பட்டு அவர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இத குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "சுமார் 200 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களில் கரோனா தொற்று உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கும், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.