தமிழகம்

கரோனாவிலிருந்து விடுபடும் மேட்டுப்பாளையம்: ஒருங்கிணைந்த முயற்சியால் அசத்தல் வெற்றி

கா.சு.வேலாயுதன்

கரோனா தொற்றால் தமிழகத்திலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட நகராட்சி என்று பேசப்பட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி, தற்போது கரோனா இல்லாத நகராட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது இப்பகுதி மக்களிடம் நிம்மதிப் பெருமூச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், நீலகிரியின் அடிவாரப் பகுதியில் இருக்கும் சிறிய நகரம். இங்கு மார்ச் 30-ம் தேதி கரோனா தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கப்பட்டு பலர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் ஏப்ரல் 2-ம் தேதி முதற்கட்டமாக 21 பேருக்கும், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 5-ம் தேதி 20 பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மிகச் சிறியது. அதில் பிரசவ வார்டு உட்பட அன்றாட நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுக்கும் கரோனா தொற்று பரவிடக்கூடும் என்பதால் இந்த 41 பேரும் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

தனியார் நிறுவனம் ஒன்று தானாக முன்வந்து கரோனா சிகிச்சைக்கென அந்தக் கட்டிடத்தை அளித்திருந்தது. எனினும், கரோனா சிகிச்சை பெறுபவர்கள் அந்தக் கட்டிடத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்பவில்லை. அவர்களது எதிர்ப்பைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவர்களை கோவையில் உள்ள கரோனா சிகிச்சை மையமான இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றினர் அதிகாரிகள். இதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகள் கரோனா மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பெரும்பான்மையான சாலைகளும், தெருக்களும் மூடப்பட்டன.

கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்ட பகுதிக்குள் இவை வந்தன. மேட்டுப்பாளையத்தின் காய்கனி மார்க்கெட் முக்கியமான பகுதியாகும். ஊட்டியிலிருந்து வரும் காய்கனிகள் இங்கு விற்கப்படும். இங்கிருந்துதான் சென்னை கோயம்பேடுக்கே காய்கறிகள் செல்லும். இதுவும் இந்த அடைக்கப்பட்ட பகுதிக்குள் அடைபட்டது. எனவே, வெளியே வர முடியாத மக்களுக்கு உதவும் வகையில் ஏகப்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் மூலமாக ‘மேட்டுப்பாளையம் கரோனா வாட்ஸப் குரூப்’ ஏற்படுத்தப்பட்டு, தேவைப்படும் மக்களுக்கு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொழில் பிரமுகர்கள் எனப் பலர் இடம்பெற்றனர். வீடில்லாதவர்கள், தினக் கூலிகள், பேருந்து நிலையத்தில் தூங்குகிறவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உணவு சமைத்துத் தரவே ஒரு தனிக் குழு ஏற்படுத்தப்பட்டது. நகரில் உள்ள கணபதி ஹாலில் சமையல் வேலைகள் நடக்க, அதை மேட்டுப்பாளையம் தாசில்தாரே முன்னின்று மேற்பார்வை செய்தார். முக்கியமாக, மேட்டுப்பாளையம் புறவெளிப் பகுதியில் இயங்கும் ஐடிசி நிறுவனம் (சோப், பிஸ்கட், இன்னபிற பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம்) 3 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியது.

சானிடைசர், முகக்கவசம், சோப் சப்ளையை நேரடியாக இந்த நிறுவனமே செய்ய, நகரில் முகக்கவசம், சானிடைசர் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இதன் பலனாக முதல் இரண்டு கட்டம் தவிர இப்போது வரை புதிதாக நகரில் ஒரு கரோனா தொற்று ஒருவருக்கும் வரவில்லை. தவிர கோவை இஎஸ்ஐ-யில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் படிப்படியாகக் குணமாகி வீடு திரும்ப ஆரம்பித்தனர். அந்த வகையில், சிகிச்சை பெற்றுவந்த 5 பேரில், நேற்று முன் தினம் 3 பேர் வீடு திரும்ப, 2 பேர் மட்டும் சிகிச்சையில் எஞ்சியுள்ளனர். அவர்கள் இருவரும் இன்றோ நாளையோ வீடு திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து ‘மேட்டுப்பாளையம் கரோனா வாட்ஸ் அப் குரூப்’பில் இயங்கிய தன்னார்வலர் ஒருவர் கூறும்போது, “இது முழுக்க நீலகிரி மலையின் அடிவாரப் பகுதி. ஊட்டி, குன்னூர் வரும் வெளிநாட்டவர்கள் இங்கே வந்துதான் பரவலாக வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வர். அதனால் இங்கே கரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆரம்பத்திலேயே சுற்றுலா வருபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் கரோனா நோய்த் தொற்று என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது.

இடையில் டெல்லியிலிருந்து கொத்தாக வந்தவர்கள் நிறைய பேர் இங்கே இருந்ததால் 41 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகினர். அதையும் இங்கே உள்ள தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மேலும் ஒரு தொற்றுகூடப் பரவிடக் கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இரவு பகல் பாராமல் இயங்கினர். அந்த உழைப்புக்கான பலன்தான், பெரிய அளவில் கரோனா தொற்று அபாயத்திலிருந்த மேட்டுப்பாளையம் இப்போது தொற்றில்லாத நகரமாக மாறிவருகிறது” என்றார் நிம்மதியுடன்.

இந்த ஒற்றுமையும், ஒருங்கிணைந்த செயல்பாடும் எல்லா ஊர்களிலும் இருந்தால், கரோனாவை வென்று நாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்!

SCROLL FOR NEXT