கரோனா வைரஸ் தொற்றுக்கு 8 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 6 பேர் குணமடைந்த நிலையில், இருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்ததால், அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்தது. இந்நிலையில், இன்று மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுவன் உட்பட 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அரியலூர் மாவட்டம் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் கடந்த ஏப்.28, 29, 30 ஆகிய தேதிகளில் லாரிகள் மூலம் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
அவர்களை மாவட்ட எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று ரத்தமாதிரிகளை சேகரித்ததுடன், அவர்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்ட 19 பேரின் முடிவுகள் இன்று வெளியான நிலையில், அனைவருக்கும் கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 4 வயது சிறுவனும் அடக்கம். இதனையடுத்து 19 பேரும் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் செந்துறை சுற்று வட்டார பகுதி கிராமங்களையும், 6 பேர் அரியலூர் சுற்று வட்டார பகுதி கிராமங்களையும் சேர்ந்தவர்களாவர்.
ஏற்கெனவே, அரியலூர் மாவட்டத்தில் 8 பேர் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 19 பேரையும் சேர்த்து 21 பேர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 27 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டம் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.