கரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனையானது.
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் உணவு, நிலவேம்பு கஷாயம் மற்றும் நிவாரணப் பொருட்கள் 700 தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், காவல், சுகாதாரத் துறையினருக்கும் தேவையான உதவிகளை ஈஷா செய்துவருகிறது.
இந்த நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும் வகையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ‘முழுமையாக வாழ்’ என்ற தலைப்பில் வரைந்த ஓவியம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இதை ஒருவர் ரூ.4.14 கோடிக்கு வாங்க சம்மதித்துள்ளார்.
இதுகுறித்து சத்குரு கூறும்போது, "இது கரோனா நிவாரணத்துக்காக வழங்கப்பட்ட நிதி. ஓவியத்துக்கான விலை அல்ல. தற்போதைய சவாலான சூழலில் யாரும் பசியால் தவிக்காமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு" என்றார்.